Sunday, 27 December 2015

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

         வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு.தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோஅல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?

பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:
தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.மண முறிவு செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.கட்டணம்,பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ.415 மட்டும்.தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் + அஞ்சல் கட்டணம் ரூ.65.
செலுத்தும் முறை:
அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரைபணமாகச் செலுத்தலாம்.
அஞ்சல் மூலம் செலுத்த:
உதவி இயக்குநர் (வெளியீடுகள்),எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம்,சென்னை-600 002என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம்.பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.
விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை:
பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே.அதற்கான உறுதிமொழியை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.
நிபந்தனைகள்:
விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது.பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
எப்படி பெறுவது?
அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.
விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன்:
சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம்இட வேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:
உதவி இயக்குநர் (வெ), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-2-இல் 044-2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்
http://www.stationeryprinting.tn.gov.in/servicetopublic.htm இத்தளத்திற்குச் சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.http://www.stationeryprinting.tn.gov.in/forms.htm
விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக்கொள்ளலாம். (www.seithiula.blogspot.in)
தத்து எடுக்கும் பிள்ளைகளுக்கான பெயர் மாற்றம் செய்வோர் கவனத்திற்கு:****************************************************************சுவீகாரத் தந்தை/தாய் இருப்பின் அவர்கள் சுவீகாரம் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.
சுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன்/மகளின் சுவீகாரத் தந்தை/ தாய் இருவரும் காலம் தவறி இருப்பின் இதை அரசு வெளியீட்டில் பொது அறிவிக்கையாக மட்டுமே வெளியிட இயலும். இதற்கான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.

இந்திய அரசின் விவசாயதிற்கான மொபைல் ஆப்

இந்திய அரசின் விவசாயதிற்கான மொபைல் ஆப்

தற்போதுள்ள இந்திய அரசு டிஜிட்டல் மயமாக்கத்தை ஊக்குவிக்கிறது. அதன் ஒரு பகுதியாக விவசாயதிற்கான AgriMarket and Crop Insurance மொபைல் ஆப பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் விவசாய பொருட்களுக்கான இன்சூரன்ஸ் மற்றும் இந்தியா முழுவதும் விவசாய பொருட்களுக்கான விலையை அறியலாம்.

          இந்த மொபைல் ஆப்இந்திய அரசின் விவசாய துறையினால் உருவாக்கப்பட்டுள்ளது அரசாங்கம் பல விதங்களில் விவசாயத்திற்காக செலவிடுகிறது. ஆனால் பலரது வேலை குறைபாட்டால் அது விவசாயிகளுக்கு சென்று சேரவில்லை, இதனை போக்கும் விதமாக இந்த மொபைல் ஆப் செயல்ப்படும். மேலும் பயிர் கடன், இன்சூரன்ஸ் மற்றும் மானியத்தொகை போன்ற பல விசியங்களை ஆப் மூலம் அறியலாம்.
https://play.google.com/store/apps/details?id=com.brinvik.vksKBazar.app&hl=en
https://play.google.com/store/apps/details?id=mgov.gov.farmer&hl=en

மின் பயன்பாட்டை கணக்கிட நவீன மீட்டர்

மின் பயன்பாட்டை கணக்கிட நவீன மீட்டர்

       மின் பயன்பாட்டில் முறைகேட்டை தடுக்க, ஏ.எம்.ஐ., என்ற அதி நவீன மின் பயன்பாடு அளவை கணக்கிடும் மீட்டர் பொருத்த, தமிழ்நாடு மின் வாரியம் முடிவு செய்துள்ளது. வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் என, எல்லா மின் நுகர்வோர்களிடமும் இந்த புதிய மீட்டர் மூலம் மின் பயன்பாடு அளவு கணக்கிடப்பட உள்ளது. 


          தமிழ்நாடு மின் வாரியம், வீடுகளில், இரண்டு மாதங்களுக்கு, ஒரு முறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கிறது. வீடுகளில், 500 யூனிட் கீழ் மின்சாரம் பயன்படுத்தினால், தமிழக அரசு மானியம் வழங்குகிறது. 500 யூனிட் மேல் பயன்படுத்தினால், முழு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Click Here & Download TNEB Bill Online Pay - Android App


              சில ஊழியர்கள், வீடு, வணிக நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, மின் பயன்பாட்டை குறைத்து எழுதுவதாக கூறப்படுகிறது. இதனால், மின் வாரியத்திற்கு, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.



கணக்கு:
இதை தவிர்க்க, தற்போது வீடுகளுக்கு, 'ஸ்டேடிக்' என்ற நவீன மீட்டர் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த மீட்டரில், மின் பயன்பாடு தவிர்த்து, உச்ச மின் தேவை, முந்தைய பயன்பாடு உள்ளிட்ட விவரங்களும் பதிவாகும். இந்த மீட்டருக்கும், ஊழியர்கள், நேரடியாக சென்று மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கின்றனர்.இந்நிலையில், அலுவலகத்தில் இருந்தபடியே, மின் பயன்பாட்டை கணக்கிட கூடிய, ஏ.எம்.ஐ., என்ற, 'அட்வான்ஸ்டு மீட்டரிங் இன்ப்ராஸ்ட்ரக்சர்' என்ற அதிநவீன மீட்டர் பொருத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. 



இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏ.எம்.ஐ., மீட்டர், 'சிம் கார்டு' அல்லது, 'ரேடியோ பிரிக்யூவன்சி' என்ற தொலைதொடர்பு வசதி மூலம், பிரிவு அலுவலக கம்ப்யூட்டர் மற்றும் தலைமை அலுவலக, 'சர்வருடன்' இணைக்கப்படும். இதனால், ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று, மீட்டர் பார்த்து, மின் பயன்பாட்டை கணக்கிட வேண்டியதில்லை. மின் பயன்பாடு கணக்கு எடுக்க வேண்டிய தேதி குறித்த, மென்பொருளை தயாரித்து, மீட்டரில் பதிவு செய்தால் போதும்.பின், தொலைதொடர்பு மூலம், அலுவலகத்தில் இருந்து, மின் பயன்பாட்டை கணக்கிடலாம். அந்த விவரத்தை, எஸ்.எம்.எஸ்., மூலம், மின் நுகர்வோருக்கு தெரிவிக்கப்படும். இந்த மீட்டரில், மின் இணைப்பிற்கு வாங்கிய அளவை விட கூடுதல் மின்சாரம் பயன்படுத்தினால், உடனே கண்டுபிடிக்கலாம். மின் பயன்பாட்டை மாற்ற முடியாது.



துண்டிப்பு:
குறிப்பிட்ட தேதியில், மின் கட்டணம் செலுத்தாவிட்டால், மின் இணைப்பை துண்டிக்க முடியும். அவ்வப் போது பயன்படுத்தும் மின்சாரம், நேரம் உள்ளிட்ட அனைத்து விவரமும் பதிவாகும்.


சென்னை, புதுப்பேட்டையில் உள்ள, சில வீடுகளில், ஏற்கனவே உள்ள மீட்டரின் அருகில், ஏ.எம்.ஐ., மீட்டர் ஆய்விற்காக பொருத்தப்பட்டு உள்ளது. ஏ.எம்.ஐ., மீட்டரில் பதிவாகும் விவரம், தனியார் நிறுவன சர்வரில் கண்காணிக்கப்படுகிறது. தற்போது சோதனை முறையில், ஆய்வு செய்யப்படும் ஏ.எம்.ஐ., மீட்டர் திட்டத்தை, தமிழகம் முழுவதும் செயல்படுத்த, இரண்டு ஆண்டுகள் ஆகலாம். தற்போது உள்ள, 'ஸ்டேடிக்' மீட்டரிலும், ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கிடும் வசதியை ஏற்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஜனவரி 1ம் தேதி முதல் அமல்: மத்திய அரசின் சி மற்றும் டி பணிகளுக்கான நேர்காணல் இல்லை , சுய சான்றளிப்பு (செல்ப் அட்டஸ்டேஷன்) தந்தால் போதும்

       அரசு பணிக்கு இனி நேர்காணல் இல்ைல. முதல் கட்டமாக வரும் 1 ம் தேதியில் இருந்து, சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்படுகிறது. இதுபோல, இறந்த தந்தையின் வேலையை பெற ‘அபிடவிட்’ (வாக்குமூல சான்றிதழ்) வாங்குவது, ‘அட்டஸ்டேஷன்’ வாங்குவது போன்ற நடைமுறைகளும் ரத்தாகிறது. 

அரசு பணிகளுக்கு தேவையில்லாமல், நேர்காணல் நடத்தப்படும் முறையை மாற்ற வேண்டும்; அதுபோல, அதிகாரிகளின் கையெழுத்து பெற்று வாக்குமூல சான்றிதழ் மற்றும் உறுதி சான்றளிப்பு போன்றவை தேவையில்லாத ஒன்று. பல ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். எளிதான நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.

மத்திய அரசு பணிகள் நிர்வாகத்துறை அமைச்சகம் இது தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்து வந்தது. வரும் 1 ம் தேதி முதல் இந்த இரு விஷயங்களில் புதிய முறையை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இனி மத்திய அரசின் சி மற்றும் டி பணிகளுக்கான நேர்காணல் இல்லை. மேலும், அதிகாரிகளிடம் சான்றளிப்பு, வாக்குமூல சான்றிதழ் போன்றவை பெற வேண்டியது இல்லை.


* அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருவதுடன், சுய சான்றளிப்பு (செல்ப் அட்டஸ்டேஷன்) தந்தால் போதும்.


* சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள் தேர்வுக்கு இனி நேர்காணல் இல்லை. தகுதி பார்த்து நேரடியாக பணிகளுக்கு அமர்த்தும் நடைமுறை பின்பற்றப்படும்.


* அதிகாரிகளிடம் இந்த சான்றிதழ் பெறுவதில் உள்ள நெருக்கடி பொது மக்களுக்கு குறையும்.


* அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள், தாங்களே உறுதி சான்று அளிக்கலாம். அவர்கள் கையெழுத்திட்டு தந்தால் போதும்.


* மறைந்த தந்தையின் வேலையை பெற விண்ணப்பிக்கும் போது ‘அபிடவிட்’ தேவையில்ைல. அதற்கும் சுய சான்றளிப்பு போதும்.


* மாநில அரசுகளும் இந்த புதிய நடைமுறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய பணியாளர் நிர்வாக மற்றும் ஓய்வூதிய துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில்,‘அரசு பணியில் சேரும் இளைஞர்கள் மீது அரசுக்கு நம்பிக்கை வேண்டும். அதனால் தான் அவர்களே சான்றளித்தால் போதும் என்று நாங்கள் நினைக்கிறோம். கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கு இந்த நடைமுறையால் பெரிதும் பலன் கிடைக்கும்’ என்றார். 

ஜனவரி.1 முதல் எந்தெந்த துறைகளுக்கு PAN CARD கட்டாயமாகிறது - வருமானவரித்துறை பட்டியல் வெளியீடு

சாதாரண லேப்டாப்பை டச் ஸ்கிரீனாக மாற்றும் புதிய கருவி: ரூ.3,200-க்கு விற்பனைக்கு வருகிறது.

       சாதாரண லேப்டாப்புகள் மீதான மக்களின் ஆர்வம் தற்போது மெதுவாக குறைந்து வருகிறது. இலகுவாக பயன்படுத்த வசதியாக டச் ஸ்கிரீன் லேப்டாப்புகளையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஆனால், இதற்காக ஏற்கனவே இருக்கும் பழைய லேப்டாப்புக்கு பதிலாக புதிதாக டச் ஸ்கிரீன் லேப்டாப்புகளை வாங்க வேண்டிய நிலை இனி இருக்காது. 



சுவீடன் நாட்டை சேர்ந்த நியோநோடு என்ற நிறுவனம் புதிய கருவி ஒன்றை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 'ஏர் பார்' என்ற இந்த யூ.எஸ்.பி. கருவியை பென்டிரைவ் போல லேப்டாப்பில் பொருத்தினால் சாதாரண லேப்டாப் ஸ்கிரீன் டச் ஸ்கிரீனாக மாறிவிடும். கண்ணுக்கு புலப்படாத ஒளிக்கதிர்களை ஸ்கிரீனின் மேற்பரப்பில் செலுத்தும் அந்த கருவி டச் வசதியை தருகிறது. இந்த கருவி மூலமாக போட்டோவை என்லார்ஜ் செய்யலாம், விண்டோவை மூவ் செய்யலாம். லிங்கை கிளிக் செய்யலாம், கைவிரலால் படத்தை கூட வரையலாம். கைவிரல்கள் மட்டுமில்லாது எந்த பொருளைக் கொண்டும் ஸ்கிரீனை தொட்டால் அது டச் ஸ்கிரீனாக இயங்கும்.

இதற்காக எந்த சாப்ட்வேரையும் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த கருவியின் ஒருபகுதியை யூ.எஸ்.பி. போர்ட்டிலும், மற்றொரு பகுதியை லேப்டாப் ஸ்கிரீனின் அடிப்பகுதியிலும் பொருத்தினால் போதும். 

முதற்கட்டமாக, 15.6 இன்ச் ஸ்கிரீன் லேப்டாப்புகளில் பயன்படுத்தத்தக்க வகையில் மட்டுமே இந்த கருவி வெளிவருகிறது. விண்டோஸ் மற்றும் குரோம் ஓ.எஸ்.களில் இயங்கும் கம்யூட்டர்களுக்கு பொருத்தமாக இது இயங்கும். ஆனால், மேக் ஓ.எஸ்-க்கு இன்னும் வெளிவரவில்லை. 

வரும் 2016-ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்த 'ஏர் பார்' கருவியின் அறிமுக விலை 49 அமெரிக்க டாலராக அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3,240 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Thursday, 24 December 2015

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு பிஎஸ்என்எல் ப்ரீபெய்டுக்கு சலுகை

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்வதில் பல்வேறு சலுகைகளை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.இது தொடர்பாக பிஎஸ்என்எல்  வெளியிட்ட செய்திக்குறிப்பு:


       கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு வாடிக்கை யாளர்களுக்கு பல்வேறு சேவைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யும் போது, முழு அழைப்புக் கட்டணத்தையும் பெற முடியும்.டிசம்பர் 25, 26-ம் தேதியன்று ரூ.220-க்கு ரீசார்ஜ் செய்யும்போது, அதே தொகையை அழைப்புக் கட்டணமாக பெறலாம்.

அதே போல், ரூ.290க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.320, ரூ.390-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.433 , ரூ.890-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.1000, ரூ.2 ஆயிரத்துக்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.2 ஆயிரத்து 300, ரூ.3 ஆயிரத்துக்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.3 ஆயிரத்து 450 , ரூ.5 ஆயிரத்துக்கு ரீசார்ஜ் செய் தால் ரூ.6 ஆயிரம் என்று செலுத்தும் தொகையைவிட கூடுதலாக அழைப்புக் கட்டணம் வழங்கப்படும். கூடுதல் அழைப்புக் கட்டண சலுகை ஜனவரி 2-ம் தேதி வரை உள்ளது.