Tuesday, 19 January 2016
68 பள்ளி-கல்லூரிகளில் ஆவின் விற்பனை மையங்கள்: தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் 68 பள்ளி-கல்லூரிகளில் ஆவின் விற்பனை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பால்வளத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், துறையின் அமைச்சர் பி.வி.ரமணா பேசியது:
ஆவின் பால் உற்பத்தி கடந்த நான்கரை ஆண்டுகளில் நாளொன்றுக்கு சுமார் 9 லட்சம் லிட்டர் உயர்ந்து இப்போது 30 லட்சம் லிட்டர் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. இதேபோன்று, பால் விற்பனையும் சுமார் 2 லட்சம் லிட்டர் உயர்ந்து இருக்கிறது. சென்னை மாநகர விற்பனை நாளொன்றுக்கு 11.5 லட்சம் லிட்டர் என்ற இலக்கினை எட்டியுள்ளது. ஆவின் வணிகச் சின்னத்தை விளம்பரப்படுத்தும் வகையில் 700 ஆவின் விற்பனை நிலையங்களுக்கு பெயர்ப் பலகை அளிக்கப்பட்டுள்ளது. 32 பள்ளி-கல்லூரிகளில் ஆவின் பால் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் 68 பள்ளி கல்லூரிகளில் ஆவின் விற்பனை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் அசோக் பில்லர், வண்ணாந்துறை, பெசன்ட், பாலவாக்கம் ஆகிய இடங்களில் ஆவின் அதிநவீன பாலகம் அடுத்த மாதம் தொடங்கப்படும் என்றார் அவர். இந்த ஆய்வுக் கூட்டத்தில், கால்நடை-பால்வளம்-மீன்வளத் துறை செயலாளர் விஜயகுமார், ஆவின் நிர்வாக இயக்குநர் சுனில் பாலீவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
மக்கள்தொகை தகவல் சரிபார்ப்புப் பணி தொடக்கம்: பிப்ரவரி 5 வரை நடைபெறும்
தமிழகம் முழுவதும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கான தகவல் சேகரிப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது. பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து, மக்கள் கணக்கெடுப்புத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தகவல் சேகரிப்புப் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட அரசு அலுவலர் (கணக்கெடுப்பாளர்) ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, குடும்பத்தினர் பற்றிய தகவலை சேகரிப்பார்.
விவரங்களை உறுதி செய்து கொள்ள...: கணக்கெடுப்பாளர் அச்சிடப்பட்ட மக்கள்தொகை பதிவேடு புத்தகத்தையும் தன்னுடன் எடுத்து வருவார். புத்தகத்தில், குடும்ப நபர்களின் பெயர், பாலினம், பிறந்த தேதி, தந்தையின் பெயர், தாய் பெயர், பிறந்த இடம், தற்போதைய முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்கும். மேலும், வீட்டிலுள்ளவர்களுக்கு ஏற்கெனவே ஆதார் எண் வழங்கப்பட்டிருந்தால், அதுபற்றிய தகவலும் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும்.
பொதுமக்கள் தங்களின் விவரங்களை சரிபார்ப்பதோடு, முழுமையான தகவல்களையும் அளிக்க வேண்டும். மேலும், செல்லிடப்பேசி எண், குடும்ப அட்டை எண் உள்ளிட்ட விவரங்களையும் கட்டாயம் அளிக்க வேண்டும்.
மக்கள் தொகை பதிவேடு புத்தகத்தில் அச்சிடப்பட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா, இறந்த நபர்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதா, புதிய உறுப்பினர் (பிறந்த குழந்தை) விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளனவா போன்ற விவரங்களையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஒத்துழைக்க வேண்டுகோள்: புதிதாக குடியேறியவர்களும் விவரங்களையும் கணக்கெடுப்பாளரிடம் தவறாமல் தெரிவித்து, தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். பொதுமக்கள் குடும்ப நபர்களின் அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்திருந்து, சரிபார்த்து பதிவு செய்ய ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இனி 'வாட்ஸ் ஆப்' இலவசமாகிறது; வருடாந்திர சந்தா கட்டணம் ரத்து
பிரபல சமூக வலைத்தளமான 'வாட்ஸ் ஆப்'-ஐ உலகம் முழுவதும் 100 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். தனது நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு பெரும்பாலும் இதை சார்ந்தே பலரும் இருக்கிறார்கள்.
தற்போது வரை வாட்ஸ் ஆப்-க்கு ஓராண்டுக்கு பிறகு பயன்படுத்த ஆண்டு ஒன்றுக்கு 1 டாலர் சந்தா கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இனி இந்த கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் வாட்ஸ் ஆப்பின் அனைத்து பதிப்புகளுக்கு கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு 19 பில்லியன் டாலருக்கு வாட்ஸ் ஆப்-ஐ பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
Tuesday, 12 January 2016
Subscribe to:
Posts (Atom)
